Monday, April 16, 2018

தினமணியில்


காரைக்குடியில் கம்பன் திருவிழா இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் திருவிழா, புதன்கிழமை (மார்ச் 28) தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து காரைக்குடி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நிறுவனர் கம்பனடிசூடி பழ. பழனியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடத்தப்படும் கம்பன் திருவிழா, காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் முதல் 3 நாள் நிகழ்ச்சிகளும், நான்காம் நாள் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலிலும் நடைபெற உள்ளது.
புதன்கிழமை மாலை நடைபெற உள்ள முதல் நாள் நிகழ்ச்சிக்கு சுகி. சிவம் தலைமை வகிக்கிறார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தொடக்க உரையாற்றுகிறார். விழாவில், எழுத்தாளர் சொ. சேதுபதி எழுதிய கம்பன் ஒரு யுகசந்தி, எழுத்தாளர் மகேஸ்வரி சற்குரு எழுதிய கம்பன் தந்த மகா மந்திரம் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசனருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட உள்ளது.
வியாழக்கிழமை காலை நடைபெற உள்ள விருதுகள் வழங்கும் விழாவுக்கு, மனிதத் தேனீ ஆர். சொக்கலிங்கம் தலைமை வகிக்கிறார். பாரதி விருது பெற்ற எழுத்தாளர் தமயந்தி, தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி, எழுத்தாளர் மாலினி ஜீவரத்தினம், கொங்கு கிராமப் பகுதியில் மனநலப் பள்ளிகள் நடத்தி வரும் சரண்யா பாபு பிரசாத் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற உள்ள கம்பன் திருவிழாவுக்கு, மீனாட்சி பெண்கள் பள்ளியின் செயலர் சொ. சொக்கலிங்கம், அவரது மனைவி லட்சுமி தலைமை வகிக்கின்றனர்.
இதில், பேராசிரியர் எம்.ஏ. சுசீலா எழுதிய "கம்பன் தொட்ட சிகரங்கள்' எனும் நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் குறித்து பேராசிரியர் சொ.மீ. சுந்தரம் தனியுரை ஆற்றுகிறார். பின்னர், கவிதைப்பித்தன் தலைமையில், "கம்ப உறவினர்கள்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறகிறது.
வெள்ளிக்கிழமை காலை, "அறம் தலை நிறுத்தல்' எனும் பொருண்மையில் நீதிநெறி உரையரங்கம் நடைபெறும். இந்த உரையரங்கத்தில், இலக்கியச் சுடர் த. ராமலிங்கம் நெறியாளராகவும், பேராசிரியர் பழ. முத்தப்பன், பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன், பேராசிரியர் ந.விஜயசுந்தரி, எழுத்தாளர் மகேஸ்வரி சற்குரு, டி.யோகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை பதிவு செய்வர்.
மாலையில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில், "கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது எவரின் சொல்' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை மாலை, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருள்சமாதி கோயிலில் நடைபெற உள்ள பங்குனி அத்த திருவிழாவுக்கு, மதுரை தியாகராசர் கல்லூரியின் செயலர் ஹரி தியாகராசன் தலைமை வகிக்கிறார். இதில், கம்பன் கோயில் சீரமைப்பு, மண்டபம் எழுப்புதல் குறித்து நமது செட்டிநாடு எனும் இதழின் புரவலர் ராஜாமணி முத்துகணேசன் திட்ட அறிமுக உரையாற்றுகிறார். "அறத்தின் நாயகன்' எனும் தலைப்பில் ச. பாரதி உரையாற்றுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment