Monday, April 16, 2018

தினமணியில்

கம்பன் படைப்பில் பெரிதும் வழிகாட்டுவது ஆசான் சொல்லே!: பட்டிமன்றத்தில் தீர்ப்பு

By DIN  |   Published on : 01st April 2018 12:25 AM  |   அ+அ அ-   |  
கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது ஆசான் சொல்லே என பட்டிமன்ற நடுவராக பேராசிரியர் பர்வீன் சுல்தானா தீர்ப்பு வழங்கினார்.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், கம்பன் திருவிழா - முத்து விழாவில் "கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது எவரின் சொல்' என்ற தலைப்பிலான பட்டிமன்றம், கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தாயின் சொல்லே! என்ற பொருளில் அரசு. பரமேஸ்வரன், ஆசிரியர் கோ.ப. ரவிக்குமார் அணியினரும், தந்தையின் சொல்லே! என்ற பொருளில் பேராசிரியர் மா. சிதம்பரம், தமிழ். திருமால் அணியினரும், ஆசான் சொல்லே! என்ற பொருளில் க. முருகேசன், ப. அறிவொளி அணியினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த 3 அணியினரின் வாதங்களையும் கேட்ட நடுவர் பர்வீன் சுல்தானா, ராமனின் தந்தையாக தசரதன் இருந்தாலும் வசிஷ்டர் என்கிற குருவால் வளர்க்கப்பட்டவன். குருவின் சொல்லால்தான் ராமனால் சீதையை மணமுடிக்க முடிந்தது. அந்த குருவான வசிஷ்டர் ராமனுக்குக் கூறிய உறுதிமொழி என்று கம்பராமாயணத்தில் உள்ள 16 பாடல்களையும் அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்கலாம்.தாய்மார்களும், தந்தைமார்களும் சேர்ந்து சொன்ன அத்தனை விழுமியங்களையும் குருவாசகமாக அந்தப் பாடல்களில் கம்பன் வெளிப்படுத்துகிறான்.
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என, கம்பன் குரு என்கிற வசிஷ்டர் வாயிலாகச் சொல்கிறார். மனிதன் வீரனாகவும், விவேகமுடையவனாகவும் இருக்கவேண்டும் என்றால், இனியசொல் உடையவனாகவும், ஈகை குணத்துடனும் இருக்கவேண்டும் என்பதுதான் அந்த குருவாசகம். மனிதனின் உடலை தூய்மைப்படுத்துவதற்காக எத்தனையோ பொருள்கள் வந்துவிட்டன. ஆனால், மனித மனங்கள் இன்னும் தூய்மையாகாமலேயே இருக்கிறது. மனித மனங்களை தூய்மைப்படுத்துவது ஆசானின் சொல்தான் எனத் தீர்ப்பளித்தார்.
நீதிநெறி உரையரங்க நிகழ்ச்சி: முன்னதாக நீதிநெறி உரையரங்கம் மற்றும் நூல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"அறம் தலை நிறுத்தல்' என்பதை இன்றைய நெறியாக வைத்து மூத்த வழக்குரைஞர் த. ராமலிங்கம் நெறியாளராக நடத்தினார்.
இதில் "ஆன்மிக உலகில்' என்ற பொருளில் கணேசர், செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பழ. முத்தப்பன், "இலக்கிய உலகில்' என்ற பொருளில் மதுரை பாத்திமா கல்லூரியின் முன்னாள் முதல்வர் விசாலாட்சி சுப்பிரமணியன் ஆகியோரும், நோக்கர்கள் சார்பாக பேராசிரியர் ந. விஜயசுந்தரி, கோவை மகேஸ்வரி சற்குரு, தேவகோட்டை டி. யோகேஷ்குமார் ஆகியோர் தங்களது கருத்துகளாகப் பதிவு செய்தும் முறையிட்டனர். இறுதியில், நெறியாளர் பதிவுரை வழங்கி நெறியரங்கத்தை நிறைவு செய்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து, பேராசிரியர் சொ. சேதுபதி எழுதி, சென்னை வானதி பதிப்பகம் பதிப்பித்த "கம்பன் கேட்ட வரம்' என்ற நூலை வழக்குரைஞர் த. ராமலிங்கம் வெளியிட, அதனைப் பேராசிரியர் பழ. முத்தப்பன் பெற்றுக்கொண்டார்.

தினமணியில்

காரைக்குடி கம்பன் திருவிழாவில் கவியரங்கம்

By DIN  |   Published on : 30th March 2018 01:33 AM  |   அ+அ அ-   |  
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா -  முத்து விழா நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு கவியரங்கம் நடைபெற்றது.
 காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவில் மாலையில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "சிகரங்களைத்  தொட்ட கம்பன்' என்ற தலைப்பில் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் தனியுரையாற்றினார்.  முன்னதாக மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா எழுதி கோவை விஜய பதிப்பகம் பதிப்பித்த "கம்பன் தொட்ட சிகரங்கள்' என்ற நூலை தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி வெளியிட,  கம்பன் அடிப்பொடியின் பேரன் ச. கண்ணன் பெற்றுக் கொண்டார்.
 பின்னர் "கம்ப உறவினர்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு புதுக்கோட்டை கவிஞர் கவிதைப்பித்தன் தலைமை வகித்து கவி பாடினார். இதில் மாமன்! என்ற பொருளில் கவிஞர் வல்லம் தாஜ்பால், தம்பி! என்ற பொருளில் கவிஞர் தஞ்சை இனியன், தங்கை! என்ற பொருளில் கவிஞர் வீ.ம. இளங்கோவன், தோழன்! என்ற பொருளில் கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், மகன் என்ற பொருளில் கவிஞர் சொ.அருணன் ஆகியோர் கவி பாடினர்.

தினமணியில்

பெரியவர்கள் ஒருவரையொருவர் போற்ற வேண்டும்: சுகி.சிவம்

கம்ப ராமாயணம் வலியுறுத்துவதுபடி, பெரியவர்கள் ஒருவரையொருவர் போற்ற வேண்டும் என்றார் சொல்வேந்தர் சுகி. சிவம்.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 80-ஆம் ஆண்டு முத்து விழாவாக கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணா திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கிய இவ்விழாவுக்கு தலைமை வகித்தும், சிங்கப்பூர் கவிஞர் பொறியாளர் அ.கி. வரதராசனாருக்கு கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கியும் சுகி. சிவம் பேசியதாவது:
இந்தியாவின் தெய்வ வரலாற்றில் ராமாயணம் தனித்த ஆளுமை உடையது. அந்த வரலாற்றில் ராமனுடைய பெரும் புகழ், தனிச்சிறப்பு பேசப்படுகிறது. கம்ப ராமாயணத்துக்கு இங்கே எதிர்ப்புக் கிளம்பிய காலத்தில், கம்பனை கொண்டாட விதைபோட்டவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி, கம்பன் அடிப்பொடி போன்ற பெரியவர்கள்தான். அகம்பாவம் இல்லாமல் அன்றைக்கு வாழ்ந்துகாட்டிய அவர்களெல்லாம் பீஷ்மர்களாகவே போற்றப்படவேண்டியவர்கள். பெரியவர்களை ஒருவரையொருவர் எப்படிப் போற்ற வேண்டும் என்பது ராமயணத்தில் படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது. தசரதனின் சபையில் விசுவாமித்திரர் உள்ளே வருகிறபோது தன்னையும் அறியாமல் எழுந்து நின்று கும்பிட்டு வரவேற்று, குருவுக்கு உரிய மரியாதையை தந்தவன் தசரதன். ஒருவரையொருவர் மதிக்கவேண்டும் என்பதற்கு சான்றாக விசுவாமித்திரரும், வசிஷ்டரும் இருக்கிறார்கள் என்பதை கம்ப ராமாயணத்தில் கம்பர் காட்டுகிறார்.
பொதுவாக மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் கற்பனையாகவே தீர்மானித்துவிடுகிறோம். கோபத்தில் வெளிப்படையாக பேசுபவர்கள் நல்ல மனதுடையவர்கள். அரசியலில் இரு பிரிவுகளாக இருந்தவர்களே சேர்ந்துவிட்டார்கள். இங்கேயும் இரண்டு விழாவாக நடப்பது ஒன்றாக ஆகவேண்டும் என்பதே நம் விருப்பம் என்றார்.
விழாவில், பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கம்பன் ஒரு யுகசந்தி என்ற நூலை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெளியிட, அதனை கம்பன் கழக துணைத்தலைவர் அரு.வே. மாணிக்கவேலு பெற்றுக் கொண்டார். மகேஸ்வரி சற்குரு எழுதிய கம்பன் தந்த மகாமந்திரம் என்ற நூலை தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் வெளியிட, அதனை கம்பன் அடிப்பொடி உறவினர் மீ. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசனார் ஏற்புரையாற்றினார். கம்பனடித்தொண்டன் மு. பழனியப்பன் வரவேற்றுப்பேசினார்.
விழாவில், கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன், கோவை விஜயா பதிப்பகம் ராமநாதன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், கம்பன் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணியில்


காரைக்குடியில் கம்பன் திருவிழா இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் திருவிழா, புதன்கிழமை (மார்ச் 28) தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து காரைக்குடி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நிறுவனர் கம்பனடிசூடி பழ. பழனியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடத்தப்படும் கம்பன் திருவிழா, காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் முதல் 3 நாள் நிகழ்ச்சிகளும், நான்காம் நாள் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலிலும் நடைபெற உள்ளது.
புதன்கிழமை மாலை நடைபெற உள்ள முதல் நாள் நிகழ்ச்சிக்கு சுகி. சிவம் தலைமை வகிக்கிறார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தொடக்க உரையாற்றுகிறார். விழாவில், எழுத்தாளர் சொ. சேதுபதி எழுதிய கம்பன் ஒரு யுகசந்தி, எழுத்தாளர் மகேஸ்வரி சற்குரு எழுதிய கம்பன் தந்த மகா மந்திரம் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசனருடைய இலக்கியப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட உள்ளது.
வியாழக்கிழமை காலை நடைபெற உள்ள விருதுகள் வழங்கும் விழாவுக்கு, மனிதத் தேனீ ஆர். சொக்கலிங்கம் தலைமை வகிக்கிறார். பாரதி விருது பெற்ற எழுத்தாளர் தமயந்தி, தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி, எழுத்தாளர் மாலினி ஜீவரத்தினம், கொங்கு கிராமப் பகுதியில் மனநலப் பள்ளிகள் நடத்தி வரும் சரண்யா பாபு பிரசாத் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற உள்ள கம்பன் திருவிழாவுக்கு, மீனாட்சி பெண்கள் பள்ளியின் செயலர் சொ. சொக்கலிங்கம், அவரது மனைவி லட்சுமி தலைமை வகிக்கின்றனர்.
இதில், பேராசிரியர் எம்.ஏ. சுசீலா எழுதிய "கம்பன் தொட்ட சிகரங்கள்' எனும் நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் குறித்து பேராசிரியர் சொ.மீ. சுந்தரம் தனியுரை ஆற்றுகிறார். பின்னர், கவிதைப்பித்தன் தலைமையில், "கம்ப உறவினர்கள்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறகிறது.
வெள்ளிக்கிழமை காலை, "அறம் தலை நிறுத்தல்' எனும் பொருண்மையில் நீதிநெறி உரையரங்கம் நடைபெறும். இந்த உரையரங்கத்தில், இலக்கியச் சுடர் த. ராமலிங்கம் நெறியாளராகவும், பேராசிரியர் பழ. முத்தப்பன், பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன், பேராசிரியர் ந.விஜயசுந்தரி, எழுத்தாளர் மகேஸ்வரி சற்குரு, டி.யோகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை பதிவு செய்வர்.
மாலையில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில், "கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது எவரின் சொல்' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை மாலை, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் அருள்சமாதி கோயிலில் நடைபெற உள்ள பங்குனி அத்த திருவிழாவுக்கு, மதுரை தியாகராசர் கல்லூரியின் செயலர் ஹரி தியாகராசன் தலைமை வகிக்கிறார். இதில், கம்பன் கோயில் சீரமைப்பு, மண்டபம் எழுப்புதல் குறித்து நமது செட்டிநாடு எனும் இதழின் புரவலர் ராஜாமணி முத்துகணேசன் திட்ட அறிமுக உரையாற்றுகிறார். "அறத்தின் நாயகன்' எனும் தலைப்பில் ச. பாரதி உரையாற்றுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.